ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் - 2014-2018 மார்க்கெட் ப்ளான்
Posted Date : 11:44 (25/06/2014)
Last Updated : 11:44 (25/06/2014)

 லகின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் குழுமமாக, ஃபியட் - கிரைஸ்லர் உருவெடுக்க விரும்புகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த முதலீட்டாளர்களின் தினத்தில், இந்த ஆசை வெளிப்பட்டு இருக்கிறது.

Fiat Chrysler Automobiles - Motor VikatanFiat Chrysler Automobiles 

2014-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் கிரைஸ்லர் குழுமத்தை மொத்தமாக வாங்கி முடித்தது ஃபியட். அதன் பிறகு உருவாக்கப்பட்ட புதிய குழுமம்தான் 'ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்.’ வழக்கமாக கார் நிறுவனங்கள் தங்களுடைய தொலைநோக்குத் திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்காது. ஆனால், தொடர்ந்து 10 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை உலகம் முழுக்க ஃபியட் கிரைஸ்லர் குழுமம், தான் செயல்படுத்த இருக்கும் திட்டங்களை ப்ளூ பிரின்ட் போட்டு அறிவித்தது.

ஃபியட், ஃபெராரி, ஜீப் என 13 கார் நிறுவனங்களை வைத்திருக்கும் இந்தக் குழுமம் வெளியிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஃபோக்ஸ்வாகன், டெய்ம்லர் குழுமங்களுக்குக் கிலி கிளப்பியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 2014 முதல் 2018-ம் ஆண்டுக்குள் 2 பிராண்டுகளையும், 12 கார்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபியட் கிரைஸ்லர் குழுமம்.

2015-ல் அறிமுகமாகிறது ஜீப்!

2015-ம் ஆண்டில் ஜீப் பிராண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஃபியட் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அறிமுகமாகியிருக்க வேண்டிய ஜீப் பிராண்டு, இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் சரிவால் தாமதமானது. ஆனால், 2015-ம் ஆண்டில் ஜீப் பிராண்டின் ரேங்ளர் எஸ்யுவியும், கிராண்ட் செரோக்கி எஸ்யுவியும் இங்கு விற்பனைக்கு வரும் என்பதுதான் மகிழ்ச்சியான முதல் செய்தி.

2015-ன் மத்தியில் ரேங்ளர் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். அதற்கு அடுத்து கிராண்ட் செரோக்கி எஸ்யுவி CKD முறையில் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வரவிருப்பதால், விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இனி, ஒரு நல்ல செய்தி; ஒரு கெட்ட செய்தி. முதலில் நல்ல செய்தி: ஜீப் பிராண்டுக்கு 75 வயது ஆவதைக் கொண்டாடும் விதத்தில், ஒரு புதிய எஸ்யுவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. 3 வரிசை இருக்கை வசதி கொண்ட இந்த எஸ்யுவியை 'C SUV'  என அழைக்கிறது ஜீப். இந்த 'C  SUV’ இந்தியாவில் 2016-ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

கெட்ட செய்தி: சமீபத்தில் அறிமுகமாகி உலக அளவில் பிரபலமாகி இருக்கும் ஜீப் ரெனிகேட் எஸ்யுவி, இந்தியாவில் விற்பனைக்கு வராது என்பதே. இதுதான் ஜீப் பிராண்டின் விலை குறைந்த எஸ்யுவி.

ஃபியட் - ஹேட்ச்பேக் கார்கள் மீது கவனம்!

ஃபியட்டிடம் தற்போது தயாராக இருப்பது புதிய கிராண்டே புன்ட்டோ, அவென்ச்சுரா ஆகிய கார்கள். எதிர்காலத்தில் வெளியாகக்கூடிய கார்கள், புதிய குளோபல் ஸ்மால் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் எனவும், இந்த பிளாட்ஃபார்மில் B செக்மென்ட் ஹேட்ச்பேக், C செக்மென்ட் செடான் மற்றும் B செக்மென்ட் UV ஒன்றும் அறிமுகமாகும் என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், புதிய கிராண்டே புன்ட்டோ காரின் ஃபேஸ் லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. 2017-ம் ஆண்டு இறுதியில் புதிய குளோபல் ஸ்மால் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கும் அடுத்த தலைமுறை புன்ட்டோ அறிமுகமாகும். இந்த அடுத்த தலைமுறை புன்ட்டோ, ஃபியட்- 500 காரை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

ஃபியட் அவென்ச்சுரா க்ராஸ்-ஓவர் கார், 2014-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்.

பவர்ஃபுல்லாக களமிறங்கும் அபார்த்!

ஃபியட்-ன் ஸ்பெஷல் பெர்ஃபாமென்ஸ் பிராண்டான அபார்த்-ன் கார்கள் இந்த ஆண்டே விற்பனைக்கு வருகின்றன. முதலில் அபார்த் 500 கார் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வருகிறது. 2015-ம் ஆண்டில் புன்ட்டோ அபார்த் பிரீமியம் ஹாட் ஹேட்ச் செக்மென்ட்டில் அறிமுகமாக இருக்கிறது. ஃபியட் டீலர்ஷிப்களில்தான் அபார்த் கார்களும் விற்பனை செய்யப்படும்.

ஃபெராரி - விற்பனைக்கு அல்ல!

உலகின் சக்தி வாய்ந்த பிராண்டு என்ற பெயரைப் பெற்ற ஃபெராரியும் ஃபியட் குழுமத்தின் கீழ்தான் வருகிறது. அதுவும் ஃபியட் கிரைஸ்லர் குழுமத்தின் 'தல’ செர்ஜியோ மர்ஷியோன்-ன் நேரடிப் பார்வையில் இயங்குகிறது. ஏற்கெனவே லாபத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் ஃபெராரி, சமீபத்தில் அறிமுகப்படுத்திய Laferrai ஹைபர் காரையும், தானே 499 வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, முழுதாக விற்று முடித்துவிட்டது.

இனி, ஃபியட் குழுமம் வெளியிட்டு இருக்கும் திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு ஃபெராரி கார் அறிமுகமாகும். இதில், ஒவ்வொரு காரும் 4 ஆண்டுகள் விற்பனையில் இருக்கும். அதன் பின்பு சக்திவாய்ந்த 'M’ மாடல்களாக உருவெடுத்து, இன்னும் 4 ஆண்டுகள் விற்பனையில் இருக்கும். மிகவும் ஹை-கிளாஸ் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து அவ்வப்போது ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும் அறிமுகமாகும்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப காரை உருவாக்கும் 'பெர்சனலைசேஷன்’ வசதியின் மூலம் லாபத்தைப் பெருக்கவும் திட்டமிட்டுள்ளது ஃபெராரி. இனி ஃபார்முலா-1 ரேஸில் செய்யும் முதலீட்டில் ஃபெராரி மிகவும் கவனமாக இருக்குமாம்.

பொதுவாக, கார் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், 2013-ம் ஆண்டில் சுமார் 7,000 கார்களை விற்ற ஃபெராரி, 2018-ம் ஆண்டிலும் 7,000 கார்களைத்தான் விற்க விரும்புகிறது. காரணம், பிராண்டின் தனித்தன்மை மற்றும் மதிப்பை அது பாதுகாக்க நினைக்கிறது. ஆனால், வளரும் நாடுகளில் டிமாண்ட் அதிகரித்தால், இந்த எண்ணிக்கையை 10,000 ஆக கூட்டத் தயாராக இருக்கிறதாம் ஃபெராரி.

முதலீட்டாளர்கள் தினத்தில் அங்கிருந்த வர்த்தக வல்லுநர்களிடம் ஆலோசனை செய்த ஃபியட் கிரைஸ்லர் CEO செர்ஜியோ மர்ஷியோன், ''ஃபெராரி பிராண்டின் இன்றைய மதிப்பு சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.  ஆனால், நீங்கள் ஃபெராரியை எப்போதும் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நாங்கள் எப்போது ஃபெராரி நிறுவனத்தை விற்போம் என்று காத்துக்கொண்டே இருக்கிறீர்கள். தப்புக் கணக்குப் போடாதீர்கள். தெளிவாகச் சொல்கிறேன். இப்போதும், எப்போதும் Ferrari is not for sale என்று திடமாக அறிவித்தார்.

2017க்குள் மீண்டெழுவோம்!

'இன்று ஓர் உலக கார் தயாரிப்பாளராக உங்கள் முன் நிற்கிறோம்’ என நம்பிக்கை மிகுந்த குரலில் முதலீட்டாளர்கள் தினத்தைத் துவக்கினார் ஃபியட் கிரைஸ்லர் குழுமத்தை முன் நடத்திச் செல்லும் அதன் தலைமை செயல் இயக்குநர், செர்ஜியோ மர்ஷியோன். இந்த நம்பிக்கைதான் இவரது அடையாளம். 2000-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கி வந்த ஃபியட் நிறுவனத்தை, இவர் தலைமையேற்று நடத்திய இரண்டே ஆண்டுகளில் (2006) லாபப் பாதைக்குத் திருப்பிக் காட்டினார். அதே ஆண்டில் ஃபியட்-ன் சந்தை மதிப்பு இரு மடங்காக எகிறியது. இதற்குக் காரணம், இவரது நிர்வாகத் திறமை.

நஷ்டத்தில் இயங்கினால், தொழிற்சாலையை மூடாமல், மேலும் உற்பத்தியை அதிகரித்து அதை மற்ற நிறுவனங்களுக்கு விற்று லாபம் பார்க்கும் யுக்தியைப் பிரபலபடுத்தியவரே இவர்தான்.

மாருதி, டாடா என மற்ற கார்களில் இந்தியாவில் ஃபியட் இன்ஜின்கள் அதிகம் புழங்குவதற்கு இவரும் ஒரு காரணம்.

சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கிரைஸ்லர் குழுமத்தில் செர்ஜியோ மர்ஷியோன் செய்த மாற்றங்களும் மெச்சப்பட வேண்டியவை. கிரைஸ்லரை ஃபியட்டுடன் இணைத்ததுடன் இல்லாமல், '2017-ம் ஆண்டுக்குள் மீண்டெழுவோம்’ என்று அளித்த உத்தரவாதத்தை காப்பாற்ற அமெரிக்கா, கனடா அரசுகள் மற்றும் வர்த்தக யூனியன்களிடம் கடன் வாங்கி, அந்த நிறுவனத்தை மீட்டெடுத்தார். தன் திறமையான நிர்வாகத் திறத்தால் 2011-ம் ஆண்டிலேயே அசலும் வட்டியுமாக எல்லாக் கடனையும் செட்டில் செய்தார்.

எல்லா சடங்குகளும் முடிந்த பின்பு, 2014-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி கிரைஸ்லர் குழுமம் மொத்தமாக ஃபியட் குழுமத்துக்குள் வந்தது.

இப்படி சரிவில் இருந்த இரண்டு மகா குழுமங்களை மீட்டெடுத்து, இன்று நம்முன் ஒரு சேர நிற்பதுதான் ஃபியட் - கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் குழுமம். இது எல்லாவற்றுக்கும் காரணம், செர்ஜியோ மர்ஷியோன். இப்போது ஒரு குழுமத்தின் தலையெழுத்தை மட்டுமல்லாமல், உலக ஆட்டோமொபைல் வர்த்தகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி படைத்த நிர்வாகிகளில் மிக முக்கியமானவராக இருக்கிறார் செர்ஜியோ மர்ஷியோன்.

[மோட்டார் விகடன் - ஜூன் 2014 இதழில் இருந்து]

TAGS :   Fiat Chrysler Automobiles, india, 2014-2018