ஆண்ட்ராய்ட் ஆட்டோ அறிமுகம் - கார்களுக்குள் காலடி எடுத்து வைக்கும் கூகுள்!
Posted Date : 14:22 (26/06/2014)
Last Updated : 16:29 (26/06/2014)

 

கார்களின் உலகத்துக்குள் டெக் நிறுவனங்கள் காலடி எடுத்துவைக்க ஆரம்பித்துவிட்டன. கார் தயாரிப்பாளர்கள்தான் இதுவரை காரினுள் இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை அளித்துவந்தார்கள். இப்போது ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் கார்களுக்குண்டான பிரத்யேக இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை தயாரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். 

android auto
 
முதலில் ஆப்பிள் நிறுவனம் CarPlay எனும் தொழில்நுட்பத்துடன் களமிறங்கியது.  உடனே விழித்துக்கொண்ட கூகுள் மிக வேகமாகவே Android Auto எனும் தொழில்நுட்பத்தை அறிவித்துள்ளது. நேற்று நடந்த கூகுள் I/O டெக் மாநாட்டில் இதைப் பற்றி கூகுள் அறிவித்தது. Open Auto Alliance என்ற அமைப்பு, ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை காருக்குள் கொண்டு வர உருவாக்கப்பட்டு இருக்கும் அமைப்பு. இதைத் துவக்கியவர்கள் ஆடி, ஜெனரல் மோட்டார்ஸ், கூகுள், ஹோண்டா, ஹூண்டாய் மற்றும் NVIDIA. இந்த அமைப்பில் இப்போது மொத்தம் 28 கார் நிறுவனங்களும், 16 டெக் நிறுவனங்களும் இருக்கின்றன. இந்த அமைப்பை நம்பித்தான் 'ஆண்ட்ராய்டு ஆட்டோ' தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கூகுள். 
 
ஆண்ட்ராய்டு ஆட்டோ
 
ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட், இது காரிலேயே பதிவேற்றப்பட்டு வருவதில்லை என்பதுதான். நம் ஆண்ட்ராய்டு ஃபோனை காரில் யூஎஸ்பி கேபிள் மூலம் இணைத்துவிட்டால், காருடைய மல்டிமீடியா ஸ்க்ரீனில் விரிகிறது ஆண்ட்ராய்டு ஆட்டோ. 'முழுக்கவே வாய்ஸ் ஆக்டிவேஷன்' முறையில் இயங்கும் இதன் மூலம் ஃபோனை இயக்கமுடியும். டச்ஸ்க்ரீனாக இருந்தாலும் தொட்டு இயக்கமுடியும். கால் செய்வது, குறுந்தகவல் அனுப்புவது, பாடல் கேட்பது, மேப்ஸ் மூலம் வழி தேடுவது என வழக்கமாக நாம் ஃபோனில் செய்யும் அனைத்து விஷயங்களையும் இதன் மூலம் நாம் செய்யமுடியும். எனவே காரில் ஒரு ஸ்க்ரீன் மட்டும் இருந்தால்போதும், சிடி பிளேயர், பட்டன்கள் என எதுவும் தேவையில்லை.  கார் ஓட்டும்போது கவனம் சிதறாமல் இருக்கவேண்டும் என்பதனால், ஃபோனில் இருக்கும் எல்லா அப்ளிகேஷன்களையும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் இயக்கமுடியாதவாறு செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு ஃபோனுக்கு கிடைக்கும் வழக்கமான சாஃப்ட்வேர் அப்டேட்களின் மூலமாகவே ஆண்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேரும் அப்டேட் ஆகிவிடும். சாஃப்ட்வேர் டெவெலப்பர்களும் இந்த தொழில்நுட்பத்துக்கு அப்ளிகேஷன்களை உருவாக்கித்தரமுடியும் என்பது பெரிய ப்ளஸ். 
 
android auto
 
கார்களுக்குள் ஃபோனை எந்த விதத்தில் பயன்படுத்தினாலும், கவனம் சிதறும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்டச்சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்காவின் NHTSA அமைப்புடன் பேசி வருவதாக சொல்லியிருக்கிறது கூகுள். 
 
கார் தயாரிப்பாளர்களுடைய இன்ஃபோடெய்ன்மென்ட் தொழில்நுட்பங்களுக்கும், இந்த ஆண்ட்ராய்டு ஆட்டோவும் மாறி மாறி இயங்கும்போது சாஃப்ட்வேர் பிரச்னைகள் எழுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த பிரச்னைக்கான தீர்வு ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பிறகுதான் தெரியவரும். 
 
Open Auto Alliance அமைப்பில் இருக்கும் ஹோண்டா, ஹூண்டாய், வால்வோ ஆகிய நிறுவனங்கள், ஏற்கனவே ஆப்பிள் CarPlay வசதியையும் அளிக்க இருப்பதாக சொல்லியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 
TAGS :   Android Auto