அலட்சியத்தின் விலை!
Posted Date : 16:09 (28/06/2014)
Last Updated : 16:09 (28/06/2014)

விபத்தில் காயம் பட்டால் மருத்துவரைத் தேடி ஓட வேண்டும். அந்த மருத்துவருக்கே மருந்துகளைப் பரிந்துரை செய்யும் மெடிக்கல் ரெப் எனப்படும் விற்பனைப் பிரதிநிதிகள், எந்த நோய்க்கு என்ன மருந்து என்பது முதல், என்ன மாதிரியான சிகிச்சை என்பது வரை அறிந்து வைத்திருப்பார்கள். அப்படி மருத்துவ ஞானம் கொண்ட ஒருவர், விபத்தில் சிக்கி மீண்ட கதை சற்று வித்தியாசமானது. தன்னுடைய சின்ன அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பெரிய பாதிப்பையும், இழப்புகளைக் குறித்தும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார் மதுரையைச் சேர்ந்த மெடிக்கல் ரெப் பார்த்திபன்.

''என் கதை, 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன் அலட்சியமாக வாகனம் ஓட்டும் யாரையாவது மாற்றினால் மிகவும் சந்தோஷமடைவேன். காரணம், அந்த மனோபாவத்தில் இருந்து மீள நான் மிகப் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்'' என்று தீர்க்கமான குரலில் பேச ஆரம்பித்தார் பார்த்திபன்.

''2007-ம் ஆண்டு அது. என்னுடை ஸ்ப்ளெண்டர் பைக்கில் பழங்காநத்தத்தில் இருந்து நகருக்குள் சென்று கொண்டு இருந்தேன். அன்று, ஒரு பஸ்ஸின் பின்னால் வேகமாக போதிய இடைவெளிகூட இல்லாமல் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டு இருந்தேன். ஹெல்மெட் அணியும் பழக்கமும் இல்லை. அதுவும், பஸ்ஸின் வலப்பக்கமாக சென்று கொண்டே இடப் பக்க சாலையோரத்தை வேடிக்கை பார்த்தவாறே அலட்சியமாக சென்று கொண்டு இருந்தேன். அப்போது, எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த ஒரு மினி டோர் வாகனம், பஸ் கடந்ததும் சடாரென வலது பக்கம் திரும்பிவிட்டது. பஸ்ஸின் பின்னால் நான் வந்ததைக் கவனிக்கவே இல்லை. சட்டென என்னை நோக்கி ஒரு வாகனம் வருவதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டேன். பிறகு... பயங்கர சப்தத்துடன் மோதியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. அதன் பின்பு நடந்த எதுவும் எனக்கு நினைவு இல்லை.

கண் விழித்துப் பார்த்தபோது, சினிமாவில் நடப்பது போல ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். என் முகம் முழுக்க சிதைந்து வாயிலுள்ள பற்கள் அனைத்தும் கொட்டிப் போயிருந்தன. உதடுகள் கிழிந்து தொங்கியபடி இருக்க... மூக்கு உருக்குலைந்து இருந்தது. கிட்டத்தட்ட 'அன்பே சிவம்’ கமல் மாதிரி இருந்தேன் என்று சொல்லலாம். மேலும் கைகள், கால்களில், மூட்டுகளில் என எல்லா இடங்களும் கன்றி வீங்கிப் போய் இருந்தன. ஆனால், நல்லவேளை - தலைக்காயம் எதுவும் இல்லை.

முன் வரிசையில் 15 பற்கள் கொட்டிப் போயின! அதைச் சரி செய்வதற்கு மட்டுமே இரண்டு லட்ச ரூபாய் செலவானது. என் முகத்தைப் பழையபடி கொண்டு வருவதற்காக இதுவரை 7 லட்ச ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு மாதத்தில் வீட்டுக்கு வந்து விட்டாலும், அடுத்து ஒரு வருடமாக ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வந்து கொண்டு இருந்தேன்.

நடந்த விபத்தில் எங்கள் இருவர் மீதும் தவறு இருக்கிறது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். இனி யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. இப்போதெல்லாம் ரொம்பவுமே கவனமாக இருக்கிறேன். ஹெல்மெட் அணியாமல் எங்கும் செல்வதில்லை. எல்லாவற்றையும்விட பைக் ஓட்டும்போது என் கவனம் முழுக்க சாலையில்தான் இருக்கிறது. இந்த உணர்வு எனக்கு முன்பே இருந்திருந்தால், மனதளவிலும் பண ரீதியாகவும் எனக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது!'' என்று முடித்தார் பார்த்திபன்.

[மோட்டார் விகடன் - மே 2011 இதழில் இருந்து]

TAGS :   Helmet, Accident, Road Safety, Madurai