புதிய ஹூண்டாய் i20 தீவிர டெஸ்டிங்கில்...
Posted Date : 15:54 (02/07/2014)
Last Updated : 15:56 (02/07/2014)

2015 Hyundai i20 - Motor Vikatan - Spyshots

இந்தியா முழுவதும், 2015-ம் ஆண்டுக்கான புதிய i20 காரை, தீவிரமாக டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காரான, மாருதி ஸ்விஃப்ட் உடன் இது போட்டி போடும் கார் என்பதால், இந்த காரை கவனமாக உருவாக்கிவருகிறது ஹூண்டாய். சென்னை அருகே i20 டெஸ்ட் செய்யப்பட்டபோது, மோட்டார் விகடன் வாசகர்கள் படம் எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். 

 
இந்த ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது, காரின் முன்பக்கம் நிறைய மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. இப்போது இருக்கும் i20 போல இல்லாமல், மேலும் ஷார்ப்பான டிஸைனுடன் முன்பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கும். காரின் முன்பக்க பம்பரிலும் ஃபோக்ஸ்வாகன் போலோ-வில் இருப்பதுபோல 'சின்' (Chin) ஸ்பாய்லர் புதிய i20 காரில் இருக்கும். 
 
  
 
காரின் உள்பக்கத்தில், ஆடியோ, ப்ளூ-டூத் கன்ட்ரோல்கள் கொண்ட 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இருக்கும். இப்போது இருக்கும் i20-ல் உள்ள சில்வர் கலரில் அல்லாமல், சென்டர் கன்ஸோல் கறுப்பு வண்ணத்தில் இருக்கும். ஹூண்டாய் கார் என்பதால், வசதிகளுக்குக் குறைவு இருக்காது. காரின் டாப் வேரியன்டில் பின்பக்க வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் இருக்கும். டெயில் லைட்டுகள் LED-யால் அமைக்கப்பட்டிருக்கின்றன. 
 
 
2015 ஹூண்டாய் i20-ல், பழைய i20-ல் இருப்பதுபோலவே 1.2 லிட்டர், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களும், 1.4 லிட்டர் டீசல் இன்ஜினும் இருக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் மாடலில், 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் விற்பனைக்குவரும்.
 
  
 
வரும் செப்டம்பர் மாதவாக்கில் அறிமுகமாக இருக்கும் 2015-ம் ஆண்டுக்கான ஹூண்டாய் i20, 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை விலை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  

Spyshots Credits go to our readers Mr. Jagdish Prabakaran, Mr. Vivek, Mr. Kishore Kumar.

 

TAGS :   Hyundai, i20, testing, spyshots, Chennai