வாகன விற்பனை... மலருமா மறுபடியும்? - டீலர்ஸ் மீட்!
Posted Date : 12:19 (04/07/2014)
Last Updated : 12:19 (04/07/2014)

 

லக அளவில் ஆட்டோமொபைல் துறை கடுமையான சரிவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மந்தமான நிலைதான். சாதனை என்றாலும் சரிவு என்றாலும் அதில் நேரிடையாக சம்பந்தப்படுவது டீலர்கள்தான். பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்னைகளில் தமிழகமே பாதிக்கப்பட்டிருந்தாலும், தொழில் நகரமான கோவையில் எப்படி இருக்கிறது கார், பைக் விற்பனை?

கடந்த சில ஆண்டு விற்பனைகளை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை கார், பைக் விற்பனை சரிந்துள்ளதாகக் கூறுகிறார்கள் டீலர்கள். புதிய ஆட்சி அமைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சிலர் ஆருடம் சொல்கிறார்கள்.

மாருதி சுஸூகியின் டீலரான கோவை அம்பாள் ஆட்டோ நிர்வாக இயக்குநர் அசோகன் முத்துசாமி, 'முதலீடு மட்டுமல்லாது, ரிஸ்க்கும் அதிகம் உள்ள தொழில் இது. முதலீடு, முயற்சி என எல்லாமே அதிகம் தேவைப்பட்டாலும், அதற்கேற்ற பலன் இல்லை. பார்க்க பெரிதாகத் தெரிந்தாலும், கார் விற்பனையில் 2.5 சதவிகிதத்தில இருந்து 3 சதவிகிதம் வரைதான் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு நல்ல சர்வீஸ் கொடுத்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் எங்களிடமே சர்வீஸுக்கு வந்தால் மட்டுமே, எங்களுக்குக் கொஞ்சம் லாபம் கிடைக்கும். அதனால், நாங்கள் வாடிக்கையாளர் திருப்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை, இது வால்யூம் கேம். அதிகமாக விற்றால்தான் லாபம். கம்பெனி கொடுக்கும் டார்கெட் எட்டினால் தள்ளுபடி, ஊக்கத்தொகை எல்லாம் வாங்கி லாபம் பார்க்க முடியும். புதிதாக ஆரம்பித்து இந்தத் தொழிலை நடத்துவது கடினம். ஏனெனில், இந்தத் தொழிலில் ரிஸ்க்கும் அதிகம்!' என்கிறார், அசோகன் முத்துசாமி.

''பைக் விற்பனைக்கும் இதே நிலைதான்'' என்கிறார் சுகுணா ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சிவக்குமார். 'முதலில், டீலர் என்றால், பிராண்டுக்கு ஒருவர்தான் கோவையில் இருப்பார். மாவட்டம் முழுவதும் இருந்து வாகனம் வாங்க இங்கே வருவார்கள். ஆனால், இப்போது கோவையில் மட்டும் 4, 5 டீலர்கள் இருக்கிறார்கள். அதே மாதிரி, பல புதிய நிறுவனங்கள் விற்பனை மையங்களைத் துவக்கி இருப்பதால், கடுமையான போட்டிகளுக்கு இடையேதான் தொழில் நடத்துகிறோம். இவ்வளவு சதுர அடியில், ஊரின் மையப் பகுதியில் கட்டடம் இருக்க வேண்டும்; இந்த கலர் டைல்ஸ் போட வேண்டும்; இந்த டிஸைன் டேபிள்தான் இருக்க வேண்டும் என எங்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள். ஆனால், லாபம் எனப் பார்த்தால், மிகவும் குறைவு. 50 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பைக் விற்பனை செய்தால், 1,550 ரூபாய் வரைதான் லாபம் கிடைக்கும். எனவே, அதிகமாக விற்பனை செய்தால்தான் தொழில் நடத்த முடியும்.

ஆனால் இப்போது பவர் கட், தொழிலாளர் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல பிரச்னைகள் காரணமாக, 40 முதல் 50 சதவிகிதம் வரை விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க இன்ஷூரன்ஸ் புதுப்பிப்பது, பழைய வாகனங்களைப் புதுப்பித்துத் தருவது எனக் கூடுதல் வேலைகளைச் செய்து சமாளிக்கிறோம்' என்கிறார் சிவக்குமார்.

''வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்புக்குப் பொருளாதார நெருக்கடியும் மிக முக்கியக் காரணம்'' என்கிறார் மஹிந்திரா கார், கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் டிவிஎஸ் டூவீலர் விற்பனை மைய உரிமையாளரான எஸ்.ஜெ.பாலகிருஷ்ணன்.

'2013 - 14-ம் ஆண்டில் கார் மற்றும் பைக் விற்பனை 50 முதல் 60 சதவிதம் வரை சரிந்துள்ளது. அதேபோல, கோவையில் தொழில் நெருக்கடியும், மழையின்மைக் காரணமாக ஏற்பட்ட விவசாயப் பணி பாதிப்பும் பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்திவிட்டன. எரிபொருள் விலை உயர்வு, வட்டி விகிதம் குறைக்கப்படாதது போன்றவையும் வாகன விற்பனை குறைந்ததற்குக் மற்ற காரணங்கள். பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஆரம்பித்து, கடுமையான போட்டிக்கிடையே தொழில் நடத்தி வந்தாலும் லாபம் மிகக் குறைவாக உள்ளது. மத்தியில் அமைந்துள்ள புதிய அரசால், இந்த நெருக்கடி குறையும் எனக் காத்திருக்கிறோம்' என்கிறார் எஸ்.ஜெ.பாலகிருஷ்ணன்.

''பொதுவாக, கார்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பிரிமீயம் கார்களின் விற்பனை துளியும் பாதிக்கப்படவில்லை!'' என்கின்றனர் ப்ரீமியம் கார் டீலர்கள்.

 

'மொத்த கார் விற்பனையில், ப்ரீமியம் கார்களின் விற்பனை 1.5 சதவிகிதம்தான். 2,500 கார்கள் விற்பனையானால், அதில் 60 முதல் 65 கார்கள்தான் ப்ரீமியம் கார்கள். அந்த அளவுக்கு ப்ரீமியம் கார்கள் குறைந்த அளவில்தான் விற்பனையாகின்றன. ஆனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் விற்பனையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சொல்லப் போனால், நடப்பாண்டின் முதல் காலாண்டில் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. தொழில் நெருக்கடி இல்லாதபட்சத்தில், விற்பனை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்' என்கிறார் கோவை ஆடி கார் விற்பனை டீலரின் முதுநிலை பொது மேலாளர் அருண்.

படுமந்தமான கார் விற்பனையால், ஏராளமான கார்கள் தேக்கம், லாபம் கணிசமாகக் குறைவு என தொழிலை நடத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள டீலர்கள், லாப வரம்பை 2.5 - 3.5 எனும் விகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன் வைக்கின்றனர். ஆட்சி மாற்றத்தினால், மீண்டும் கார், பைக் விற்பனை சூடு பிடிக்கும் என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.

நல்லது நடக்கட்டும்![மோட்டார் விகடன் - ஜூன் 2014 இதழில் இருந்து]

TAGS :   Indian, Automobile, Industry, Dealer, Coimbatore