ஹோண்டா மொபிலியோ - முதல் டெஸ்ட் ரிப்போர்ட்!
Posted Date : 13:54 (08/07/2014)
Last Updated : 15:29 (08/07/2014)நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்பு, விற்பனைக்கு வரத் தயாராகிவிட்டது ஹோண்டாவின் 7 சீட்டர் காரான மொபிலியோ. ஜூலை மாத இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரை, நாசிக் புறநகரில் டெஸ்ட் டிரைவ் செய்தேன். ஹோண்டாவின் மொபிலியோ, மாருதி எர்டிகாவுடன் போட்டி போடும் கார். ஆனால், டொயோட்டா இனோவாவுடன் போட்டி போட முடியாத கார். ஏன் என்றால்...


பிரியோ டு மொபிலியோ!

ஹோண்டா பிரியோ மற்றும் அமேஸ் கார்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் நீளத்திலும், அகலத்திலும் விரிவடைந்திருக்கிறது. ஆனால், உயரத்தில் பெரிய மாற்றம் இல்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, சின்ன ஹேட்ச்பேக் கார் போலவே இருக்கிறது மொபிலியோ. நீளத்தில் எர்டிகாவைவிட 121 மிமீ நீளமான கார் மொபிலியோ. ஆனால் அகலம், உயரம், வீல்பேஸ் என அனைத்திலுமே எர்டிகாவைவிட அளவு குறைவு. ஆனாலும், காருக்குள் இடவசதியை அதிகப்படுத்தியிருப்பத்தில்தான் ஹோண்டாவின் டிஸைன் திறமை அடங்கியிருக்கிறது.இடம் தாராளம்!


பிரியோவின் டேஷ்போர்டுதான் மொபிலியோவிலும் இருப்பதால், இந்த காம்பேக்ட் டேஷ்போர்டு விண்ட் ஸ்கிரீனை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதனால், காருக்குள் இடவசதி அதிகரித்திருக்கிறது. இடவதியை அதிகரிப்பதற்காக, சீட்டுகள் மிகவும் ஸ்லிம்மாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், முதல் இரண்டு வரிசை இருக்கைகளில் இடவசதி மிகவும் அதிகமாக இருக்கிறது. காரின் உயரம் குறைவாக இருந்தாலும், காரின் உள்ளே ஹெட்ரூம் அதிகமாகவே இருக்கிறது.குழந்தைகளுக்கு மட்டுமே!


மூன்றாவது வரிசை இருக்கைகளுக்குச் சென்று அமர்வது சுலபமாகவே உள்ளது. இடவசதியும் ஓகே. ஆனால், இந்த மூன்றாவது வரிசை இருக்கைகள் தாழ்வாக இருப்பதால், முட்டியை மடக்கி உட்கார வேண்டியிருப்பது மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அதனால், நீண்ட தூரப் பயணத்துக்கு மூன்றாவது வரிசை இருக்கைகளில் பெரியவர்கள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியாது.

 மியூஸிக் சிஸ்டம் உண்டு!


மொபிலியோவில் ப்ளூ-டூத் வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகளில் ஆட்கள் உட்கார்ந்த பிறகும் டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இருக்கிறது. பாதுகாப்புக்கு ஏபிஎஸ் பிரேக்கும், இரண்டு காற்றுப் பைகளும் உள்ளன. மொபிலொயோவில் ’ஆர்எஸ்’ எனும் வேரியன்ட்டை சில மாதங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. இதில் ஜிபிஎஸ், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

பெட்ரோல் மந்தம் - டீசல் பவர்ஃபுல்!


4.3 மீட்டர் நீளம் கொண்ட 7 சீட்டர் கார் என்பது, வெளியே இருந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது. காருக்குள் உட்கார்ந்துவிட்டால், சின்ன ஹேட்ச்பேக் காரை ஓட்டுவதைப்போல சுலபமாக இருக்கிறது மொபிலியோ. ஹோண்டா சிட்டியில் இருக்கும் அதே 119 பிஹெச்பி சக்திகொண்ட பெட்ரோல் இன்ஜினும், அமேஸ் மற்றும் சிட்டியில் உள்ள 100 பிஹெச்பி சக்திகொண்ட டீசல் இன்ஜினும்தான் மொபிலியோவில் பொருத்தப்பட்டுள்ளன. அதிக எடை காரணமாக, பெட்ரோல் இன்ஜினின் ஆரம்ப வேகம் மிகவும் மந்தமாக இருக்கிறது. 2,000 ஆர்பிஎம் தாண்டிய பிறகுதான்  பிக்-அப் எடுக்கிறது. இதற்குள் பல கார்கள் நம்மைக் கடந்து போய்விடுகின்றன.


மொபிலியோவுக்கு சரியான இன்ஜின், டீசல் இன்ஜின்தான். பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்புகிறது. டர்போ லேக் இதில் இல்லை என்பதுதான் ஸ்பெஷல். பெட்ரோல் இன்ஜின் போன்று மந்தமாக இல்லாமல், ஆக்ஸிலரேட்டரை மிதிக்க மிதிக்க... வேகம் எடுக்கிறது. நம்முடைய சிறிய டெஸ்ட் டிரைவில் நாம் அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தைத் தொட்டோம்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம்!


189 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பயப்பட வேண்டாம். சஸ்பென்ஷனும் சிறப்பாக இருப்பதால், ஓட்டுதல் தரத்தில் குறை எதுவும் இல்லை.

ஜன்னலைத் திறக்காமலே சத்தம் வரும்!


மொபிலியோவின் மிகப் பெரிய குறையே, காருக்குள்ளே வரும் சத்தம்தான். இன்ஜின், சத்தம் இல்லாமல் இருந்தாலும், வெளிச்சத்தமும், டயர்களின் சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. அனைத்து ஜன்னல்களையும் திறந்துவிட்டு ஓட்டுவதுபோல எரிச்சலைத் தருகிறது இந்தச் சத்தம். அதனால், 100 கி.மீ வேகத்தைத் தாண்டினாலே, காருக்குள்ளே கேட்கும் சத்தத்தில் நாம் ஏதோ 200 கி.மீ வேகத்தில் செல்கிறோம் என்பது போன்ற பயத்தை ஏற்படுத்துகிறது.

எம்யூவி கார்களிலேயே அதிக மைலேஜ்?


மொபிலியோ பெட்ரோல், லிட்டருக்கு 17.3 கி.மீ; டீசல், லிட்டருக்கு 24.2 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது ஹோண்டா. இதை முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்த பிறகுதான் உறுதிப்படுத்த முடியும்.

முதல் தீர்ப்பு!


ஹோண்டா மொபிலியோவின் விலை, மாருதி எர்டிகாவைவிட 50,000 ரூபாய் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படியானால், மொபிலியோவின் விலை 8 முதல் 11 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும். எர்டிகாவைவிட தோற்றத்திலும், இடவசதியிலும், பெர்ஃபாமென்ஸிலும் சிறப்பான காராக இருக்கிறது மொபிலியோ. ஆனால், மொபிலியோவுக்கும், டொயோட்டா இனோவாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தரத்திலும், பெர்ஃபாமென்ஸிலும் மொபிலியோவைவிட பல படிகள் முன்னிலையில் இருக்கிறது இனோவா.

10 லட்சம் ரூபாய்க்குள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என முழுக் குடும்பத்துடன் அடிக்கடி பயணிப்பவர் என்றால், மொபிலியோ டீசல் உங்களுக்கு சூப்பர் சாய்ஸ்!

- சார்லஸ்

TAGS :   honda mobilio test report