டெல்லி ரேஸ் டிராக்கில், மெர்சிடீஸ் பென்ஸ் CLA 45 AMG டிரைவ் ரிப்போர்ட்
Mercedes Benz CLA 45 AMG - BIC - Motor Vikatan
(Click the images for their High-Res Version)
 
கடந்த ஜூலை 22 அன்று, நம் நாட்டுக்கு மெர்சிடீஸ்  CLA 45 AMG காம்பேக்ட் பெர்ஃபாமென்ஸ் செடான் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது பென்ஸ். 68.50 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலைகொண்ட இந்த காரை, டெல்லி அருகே இருக்கும் புத் இன்டர்நேஷனல் ரேஸ் சர்க்யூட்டில் நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது,ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்து பார்த்தேன். 
 
 
உலகிலேயே தொடர்தயாரிப்பில் இருக்கும் சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர் இன்ஜின் ஏஅம்ஜி-ன் M133. இது, 2.0 லிட்டர் கொள்ளளவைக் கொண்ட, டர்போ  சார்ஜர் பொருத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜினைப் பொருத்தி இந்தியாவில் விற்பனையாகும் ஒரே கார் என்பதால், நானும் இதை முறையாக டிராக்கில் ஓட்ட ஆர்வமாக இருந்தேன். 
 
Mercedes Benz CLA 45 AMG - BIC  Mercedes Benz CLA 45 AMG
 
இரண்டு லேப்கள் ஓட்டக் கிடைத்த நிலையில், காரின் கியர்பாக்ஸ் மோடுகளையும், டிரைவிங் பொசிஷனையும் சொல்லிக் கொடுத்தார் மெர்சிடீஸ் பென்ஸ் ஏஎம்ஜி டிரைவிங் அகாடமியின் மூத்த பயிற்சியாளர் ரென்ஹோல்டு ரெங்கர் (Reinhold Renger). இவர் புகழ்பெற்ற நர்பர்கிரிங் (Nurburgring) ரேஸ் டிராக்கில் 24 மணி நேர எண்ட்யூரன்ஸ் ரேஸில் வெற்றி பெற்றவர். நான் காரை ஆன் செய்ய, இதன் இன்ஜின் அமைதியாக உயிர்பெற்றது. ஸ்போர்ட்ஸ் கார் அளவுக்கு இந்த இன்ஜின் மிரட்டலான சத்தத்தை எழுப்புவது இல்லை. இந்த நேரம் பார்த்து டிராக்கின் ரேஸிங் லைனை சொல்லிக்கொடுக்க ரெங்கர் தன்னுடைய SLS AMG காரை ஆன் செய்ய, அதன் இன்ஜின் சத்தம் புத் ரேஸ் டிராக்கின் கிராண்ட் ஸ்டாண்ட் முழுக்க எதிரொலித்து அடங்கியது. SLS AMG போன்ற உண்மையான ஸ்போர்ட்ஸ் கார்கள் இருக்கும்போது, CLA 45 AMG ஏதோ பூனைக்குட்டி போன்று அமைதியான சத்தத்தை எழுப்புவதைப் போல இருக்கிறது. 
 
Mercedes Benz CLA 45 AMG rear
 
ஏ கிளாஸில் காரின் கியர்பாக்ஸ் கன்ட்ரோல்கள், ஸ்டீயரிங் வீலில் பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், ஸ்போர்ட்ஸ் கார் என்பதால்  CLA 45 AMG காரில், வழக்கமான இடத்தில்தான் கியர் லீவர் கொடுக்கப்பட்டு இருந்தது. காரின் கியர்பாக்ஸை 'ஸ்போர்ட்ஸ்' மோடில் செட் செய்துவிட்டு, ஓட்ட ஆரம்பித்தேன். 
 
Mercedes Benz CLA 45 AMG Front CLA 45 AMG seats
 
புத் ரேஸ் டிராக்கில் மூன்றாவது கார்னர் சற்று சிக்கலானது. டிராக்கின் உயரம் மேலே எழும்பிய கையோடு, வலதுபக்கம் இருக்கும் ஒரு கொண்டை ஊசி வளைவில், கார் அதிகமாக அண்டர்ஸ்டீயர் ஆனது. காரணம், CLA 45 AMG அடிப்படையில் ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார். 4MATIC ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருந்தாலும், முன்பக்க வீல்களுக்கு டிராக்‌ஷன் கிடைக்காத சமயங்களில் மட்டுமே, அது பின் வீல்களுக்கும் சக்தியை அனுப்பும். இந்த வளைவை அடுத்து வரும் நேர்ப்பகுதியில் ஆக்ஸிலரேட்டரை முழுவதும் மிதிக்க, முன்னே சீறிப்பாய்கிறது. இந்த ஒரு செக்‌ஷனில் மட்டுமே அதிகபட்ச வேகத்தில் காரை செலுத்த முடியும். ஆனால்,
எவ்வளவு வேகத்தில் செல்கிறேன் என  பார்க்க நினைப்பதற்குள் நான்காவது கார்னர் வந்துவிட்டது. நேராக அதிகபட்ச வேகங்களில் ஓட்டும்போது காரின் ஸ்டீயரிங் சற்று லைட்டாகவே இருந்தது. ஆனால், ஃபீட்பேக் அருமை. அதிக வேகங்களிலும், அந்த த்ரில் உள்ளே தெரியவில்லை. இதனால் நான்காவது கார்னருக்கு எவ்வளவு தூரத்துக்கு முன்னரே பிரேக் செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதில், எனக்கு குழப்பம் இருந்தது. இந்த காரின் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை நம்பி, கொஞ்சம் தள்ளியே கடுமையாக பிரேக் செய்ய, எதிர்பார்த்ததைவிட வேகம் சிறப்பாகவே குறைந்தது. டிராக்கின் ஐந்தாவது கார்னரில் சற்று வேகமாகவே வளைத்ததால், டயர்கள் 'ஸ்க்ரீச்' சத்தம் எழுப்ப, காரை அதன் லிமிட்டில் ஓட்டிக்கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது.
 
Mercedes Benz CLA 45 AMG - BIC - Motor Vikatan track /Mercedes Benz CLA 45 AMG Track
 
அடுத்து வந்த ஆறு முதல் ஒன்பதாவது கார்னர் வரை, உடனுக்குடன் வளைய வேண்டிய கார்னர்கள் என்பதால், காரின் டைனமிக்ஸை உணர முடிந்தது. இயற்கையாகவே இறுக்கமான சஸ்பென்ஷன் என்பதால், கார் கட்டுக்குலையாமல் சென்றது. ஆனால், தான்  ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார் என்பதை ஒவ்வொரு வளைவிலும் உணர்த்திக்கொண்டே வந்தது CLA 45 AMG. பத்தாவது கார்னர்தான் மிக முக்கியமான கார்னர். எந்த ஒரு டிரைவருக்கும் அதீத தன்னம்பிக்கையை அளித்து ஓரம் தள்ளிவிடும் கார்னர் இது. இங்கேதான் அதிக வேகத்துடன் ஒரு காரை வளைக்க முடியும். காரின் பாடி ரோலும் அப்பட்டமாக தெரியும் இடம் இது. ஆனால், மற்ற கார்னர்கள்போல ஒரே ஒரு பக்கமாக ஓட்டாமல், முதலில் வலதுபக்கமாக ஆரம்பித்து, இடதுபக்கத்தைத் தொட்டு, பின்னர் வலதுபக்கம் வந்து, மீண்டும் இடதுபக்கத்தைத் தொட்டு என மிக சிக்கலான லே-அவுட் இது. ஆனாலும், CLA 45 AMG-ல் இந்த கார்னரை மிக எளிதாகக் கடக்க முடிந்தது. பாடி ரோல் கொஞ்சம் இருந்தாலும், சாதாரணச் சாலையில் ஓடக்கூடிய கார் என்பதால், இது நல்லதுதான். 
 
Mercedes Benz CLA 45 AMG rear
 
அடுத்த லேப்பில்தான் CLA 45 AMG காரை ,டிராக்கில் முழுவதும் கட்டவிழ்த்துவிட்டு விரட்டினேன். மேனுவல் மோடில் பேடில் ஷிஃப்டர்கள் மூலம் ஓட்டும்போது, காரின் முழு பரிணாமத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதன் 7-ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் கடகடவென கியர்களைக் கடக்கிறது.  என்னதான் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற ஆக்ஸிலரேஷன் இருந்தாலும், எக்ஸாஸ்ட் சத்தம் சற்று சுமாராகவே இருப்பதால், மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களில் இருக்கும் உச்சபட்ச த்ரில் இதில் இல்லை. மூன்றாவது கார்னரைத் தாண்டி வரும் நேர்ப்பகுதியில், அதிகபட்சம் மணிக்கு 218 கி.மீ வேகத்தை நம்மால் தொடமுடிந்தது. ஆனால், இந்த வேகத்தில் செல்லும்போது இருக்க வேண்டிய த்ரில், காரை  கார்னர்களில் வளைக்கும்போது கிடைக்கிறது. உண்மையில், கார்னர்களில்தான் இந்த காரை ஓட்ட  ஜாலியாக இருக்கிறது.  
 
இந்தியாவின் சிறந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் காரா மெர்சிடிஸ் பென்ஸ் CLA 45 AMG? 
 
Mercedes Benz CLA 45 AMG - BIC - Motor Vikatan Eberhard Kern
 
மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டுவதுபோல CLA 45 AMG காரை டிராக்கில் ஓட்ட முடியாது. வளைவுகளில் மிக ஆர்வமாக இந்த காரைத் திருப்பினால், ஒரு ரியர் வீல் டிரைவ் கார் தரும் அனுபவத்தை இந்த கார் தராது. ஆனால், இந்த காரின் டைனமிக்ஸை சற்று புரிந்துகொண்டுவிட்டால், டிராக்கில் விரட்டி எடுக்கலாம். டார்க் வெளிப்படும் விதமும் அருமையாக இருக்கிறது. டிராக்கிலேயே அவ்வளவு சீக்கிரம் இதைக் கட்டுக்குலைய வைக்க முடியவில்லை எனும்போது சாதாரண சாலையிலும் பாதுகாப்பான காராக CLA 45 AMG இருக்கும் எனலாம். மொத்தத்தில், இந்தியாவுக்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் காராக மெர்சிடீஸ் பென்ஸ் CLA 45 AMG விளங்குகிறது. என்ன.. அந்த எக்ஸாஸ்ட் சத்ததை மட்டும் இன்னும் கொஞ்சம் ஸ்போர்ட்டியாக டியூன் செய்திருக்கலாம். 

 - ர. ராஜா ராமமூர்த்தி