உங்கள் காரின் சேஃப்டி எப்படி? - க்ராஷ் டெஸ்ட்
Posted Date : 12:39 (28/07/2014)
Last Updated : 18:42 (29/07/2014)

மாருதி ஆல்ட்டோ 800, ஃபோர்டு ஃபிகோ, ஹுண்டாய் ஐ10, டாடா நானோ, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகியவை இந்தியாவின் டாப் செல்லிங் கார்கள். இந்த ஐந்து கார்களும், இப்போது பாதுகாப்பில் ஸீரோ மார்க் வாங்கி இருப்பது, கார் வாடிக்கையாளர்களை அதிரவைத்திருக்கிறது. 

இங்கிலாந்தில் 'குளோபல் நியூ கார் அசெஸ்மென்ட் புரோக்ராம்’(Global NCAP) என்ற அமைப்பு செயல்படுகிறது. இது, வளரும் நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பைச் சோதனை செய்யும் அமைப்பு.  இந்த அமைப்பு கார்களின் பாதுகாப்பு அம்சத்தைப் பொருத்து '5 ஸ்டார்’ ரேட்டிங் வரை வழங்கும்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்திய மார்க்கெட்டில் மிக முக்கிய கார்களான ஆல்ட்டோ 800, ஃபிகோ, ஐ10, நானோ, போலோ கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து சோதித்தது என்காப். இதன் ரிசல்ட்தான் அதிர்ச்சி ரகம். இந்த ஐந்து கார்களில் ஒரு கார்கூட பாதுகாப்பு அம்சத்தில் ஒரு ஸ்டார்கூட வாங்கவில்லை.

க்ராஷ் டெஸ்ட்டுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஐந்து கார்களின் விலை குறைந்த வேரியன்ட்டுகளை விலைக்கு வாங்கி, ஜெர்மனிக்கு அனுப்பி, அங்குள்ள ADACஅமைப்பின் சோதனைக் கூடத்தில் வைத்து க்ராஷ் டெஸ்ட் செய்திருக்கிறார்கள். இந்தச் சோதனை, கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. மணிக்கு 64 கி.மீ வேகத்தில் (நம் ஊர் நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே மணிக்கு 100 கி.மீ இந்த கார்கள் பறக்கின்றன) 'ஃப்ரன்ட்டல் இம்பேக்ட் க்ராஷ் டெஸ்ட்’ செய்திருக்கிறார்கள். விலை குறைந்த வேரியன்ட் என்பதால், இந்த 5 கார்களிலும் காற்றுப் பைகள் இல்லை. ஹூண்டாய் ஐ10, மாருதி ஆல்ட்டோ 800, டாடா நானோ மூன்று கார்களும் இந்த டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்திருக்கின்றன. ''இந்த கார்களில் விபத்து ஏற்பட்டால், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதது. காரின் முழு அமைப்பே குலைந்துவிடுவதால், இந்த கார்களில் காற்றுப் பைகளைப் பொருத்தினாலும் எந்த பலனும் இருக்காது'' என்று தெரிவித்திருக்கிறது என்காப்.  

''ஃபோர்டு ஃபிகோ, போலோ இரண்டு கார்களுமே இந்த டெஸ்ட்டில் முழுவதுமாக உருக்குலையவில்லை. இதனால், காற்றுப் பைகளைப் பொருத்தினால், இந்த கார்கள் பாதுகாப்பான கார்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

''இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த கார்களின் பாதுகாப்பு, ஐரோப்பிய தரத்துடன் ஒப்பிடும்போது, 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது!'' என்று தெரிவித்திருக்கிறார் என்காப் அமைப்பின் தலைவர் மேக்ஸ் மோஸ்லி.

என்காப்பின் சோதனை குறித்து கார் நிறுவனங்களிடம் கேட்டபோது, எல்லா நிறுவனங்களும் 'எங்கள் கார்கள் இந்திய சோதனையில் வெற்றி பெற்ற கார்கள்’ என்கிற ஒரே பதிலையே தந்தன.

அப்போது உலகத் தரம் என்று சொல்வது?!

அப்டேட் - Global NCAP சோதனைகளின் முடிவைப் பார்த்த ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், உடனடியாக இந்தியாவில் விற்கப்படும் அனைத்து போலோவின் வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகளை ஸ்டாண்டர்டாக அளிக்க உத்தரவிட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் விடுத்த வேண்டுகோளின்படி, காற்றுப்பை பொருத்தப்பட்ட போலோவை க்ராஷ் டெஸ்ட் செய்த Global NCAP, Adult occupant protection-ல் போலோவுக்கு 4 ஸ்டார்களை வழங்கியிருக்கிறது. 

[ மோட்டார் விகடன் - மார்ச் 2014 இதழில் இருந்து]

TAGS :   Global NCAP, Crash Tests, Polo, Alto, Figo, I10, Nano, Volkswagen, tata, Maruti, Hyundai, Ford, motor vikatan, crash tests