ஜூலை மாதம் கார்களின் விற்பனை உயர்ந்தது!
Posted Date : 14:09 (02/08/2014)
Last Updated : 14:10 (02/08/2014)
ட்டோமொபைல் சந்தை இன்னும் சரிவில் இருந்து மீளவில்லை. கடந்த நிதியாண்டைவிட இந்த ஆண்டு, 4.65 சதவிகிதம் கார் விற்பனை குறைந்திருக்கிறது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கார்களின் விற்பனை சற்று அதிகமாகியிருக்கிறது. ஜூலை மாதத்தில் மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த அளவு அதிக கார்களை விற்பனை செய்திருக்கின்றன.
 

மாருதி கார்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 19.9 சதவிகிதம் அதிகரித்தித்துள்ளது. மொத்தம் 90,093 கார்களை விற்பனைசெய்துள்ள மாருதி, கடந்த  ஆண்டு இதே சமயத்தில் 75,145 கார்களை விற்பனைசெய்திருந்தது. மாருதியின் காம்பேக்ட் கார்களான ஸ்விஃப்ட், எஸ்திலோ, ரிட்ஸ், செலெரியோ போன்ற கார்களின் விற்பனை மட்டும் 81 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. காம்பேக்ட் செடானான டிசையரின் விற்பனை 22.2 சதவிகிதம் அதிகரிக்க, ஆல்ட்டோ, வேகன் ஆர் போன்ற கார்களின் விற்பனை 14.4 சதவிகிதம் குறைந்திருக்கிறது. 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஆண்டைவிட 12.69 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
 
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 39.97 சதவிகிதம் அதிக கார்களை விற்பனைசெய்துள்ளது. அமேஸ், சிட்டி கார்களின் வெற்றிதான் இதற்குக் காரணம். மொபிலியோ, வரவிருக்கும் புதிய ஜாஸ் ஆகிய கார்களின் காரணமாக, அடுத்த ஆண்டு இந்த சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கலாம்.  
 
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில் 11,921 கார்களை விற்பனைசெய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3.52 சதவிகிதம் அதிகம். 

ஃபோர்டு இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனை  ஜூலை மாதத்தில் வீழ்ச்சியடைந்தன. ஃபோர்டு இந்தியா 7,592 கார்களை விற்பனைசெய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3.49 சதவிகிதம் குறைவு. 

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், தன்னுடைய கார் விற்பனையில் 27.32 சதவிகிதம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6,503 கார்களை விற்பனைசெய்திருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம் வெறும் 4,726 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. 

 
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை 4.18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 23.13 சதவிகிதம் குறைந்திருக்கிறது.  

டூவீலர் செக்மென்ட்டில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனை 8.67 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5.30 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம். ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.  சுமார் 3.81 லட்சம் டூவீலர்களை ஜுலை மாதத்தில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா. யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை 35.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 
TAGS :   Car sales, Profit, percentage