விரைவில் அமலுக்கு வருகிறது புதிய வேக வரம்பு விதிகள்
Posted Date : 15:50 (04/08/2014)
Last Updated : 16:00 (04/08/2014)
ம்நாட்டின் சாலைகளுக்கான வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) விதிகளை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகளின்படி, கார்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீயாகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை டூவீலர்கள் மணிக்கு 50 கிமீ வேகம் வரை மட்டுமே செல்லலாம் என இருந்தது. இனி, மணிக்கு 80 கிமீ வரை செல்லலாம். விரைவில் செயல்பாட்டில் வர இருக்கும் குவாட்ரிசைக்கிள்கள் மணிக்கு 70 கிமீ வரை செல்லலாம்.  
 
தற்போது செயல்பாட்டில் இருக்கும் வேக வரம்பு விதிகள் அனைத்தும் 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை. அப்போது இந்தியாவில் சாலை வசதிகளும் குறைவு, வாகனங்களும் அதிக அளவில் இல்லை. அதனால், வாகனத்தைப் பொறுத்து அப்போது சாலை விதிகளை வடிவமைத்தார்கள். ஆனால், இப்போது சாலை வசதிகளும், வாகனங்களும் கூடிவிட்டதால், விதிகளை மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளார்கள். 
 
மேலும் அமலுக்கு வர இருக்கும் புதிய வேக வரம்பு விதிகளின்படி ஒரு பயணிகள்  வாகனத்துக்குள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் டிரைவரைத் தவிர, ஒன்பது பேர் பயணிக்க முடியுமென்றால், அந்த வாகனம் மணிக்கு 80 கிமீ வரை மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், 8 பேர் மட்டுமே பயணிக்க கூடிய வாகனமாக இருந்தால், மணிக்கு 100 கிமீ வரை செல்லலாம். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
TAGS :   India, Speed limits, 1989