எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் சாலையில் இருக்கும்போது, நிச்சயம் எங்களுக்கு வேலை குறைந்துவிடும்
Posted Date : 17:01 (04/08/2014)
Last Updated : 17:02 (04/08/2014)

 டந்த மார்ச் மாதம் சென்னை ஐஐடியில், ஷெல் நிறுவனம் தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடத்தியது. இதற்கு முன்பு, லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியிலும், பீஜிங்கில் உள்ள சிங்ஹூயா பல்கலைக் கழகத்திலும் மட்டுமே நடைபெற்றுள்ள இந்த தொழில்நுட்பக் கருத்தரங்கம், உலக அளவில் மிகப் பிரபலமானது. உலக ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். 

ஷெல் நிறுவனத்தின் செல்டா குன்செல், இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார். எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் பற்றி, அவர் மோட்டார் விகடனுக்கு அளித்த பேட்டி.

 ''ஷெல் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை, '2035-ம் ஆண்டில்தான் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும். பின்பு படிப்படியாகக் குறைந்து, 2050-ம் ஆண்டுக்குப் பின்பு முழு எலெக்ட்ரிக் கார்கள்தான் சாலையில் இருக்கும்’ என்று சொல்கிறது. அப்படியானால், ஐ.சி இன்ஜின்கள் இல்லாதபட்சத்தில், ஷெல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?''

''எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் சாலையில் இருக்கும்போது, நிச்சயம் எங்களுக்கு வேலை குறைந்துவிடும். ஆனால், எலெக்ட்ரிக் கார்களிலும் சக்கரங்கள், பேரிங்குகள் போன்ற பாகங்கள் இருக்கின்றன. அதனால், குறிப்பிட்ட வகை லூப்ரிகன்ட்ஸின் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஐ.சி இன்ஜின்களின் வாழ்நாளை அதிகரிக்கவும், அவற்றை அதிகம் எரிபொருள் சேமிக்கும்படி செய்யும் ஆராய்ச்சியில் இருக்கிறோம். 'ஷெல் நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்ததில், எங்களுடைய T25 சிட்டி காரில் 6.5 சதவிகிதம் அதிக மைலேஜ் கிடைத்துள்ளது’ என்று கார்டான் முரே இந்த கருத்தரங்கில் சொன்னதை நினைவுப்படுத்திப் பாருங்கள். எல்லா கார்களிலும் அதிக எரிபொருள் சேமிப்பு என்றால், நாங்கள் அறிக்கையில் சொன்ன 2035-ம் ஆண்டு என்ற கணக்கு சற்று தள்ளிப்போகும்.''

''ஆனால், எலெக்ட்ரிக் கார்களின் வருகை உங்கள் தொழில் ஆதாரத்தையே குலைத்துவிடுமே?''

''அதனால்தான் பல புது முயற்சிகளில் ஷெல் இப்போது இறங்கியிருக்கிறது. இயற்கை எரிவாயு மற்றும் பல மாற்று எரிசக்திகளை ஆட்டோமொபைல்களில் 'திறமையாக’ப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கிறோம். எலெக்ட்ரிக் கார்கள் சாலையை ஆக்கிரமிக்கும்போது, எங்களுடைய தொழில்நுட்பங்களை எலெக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு தயாராக இருப்போம்.''

 ''பிரபல கார் டிசைனர் கார்டான் முரே , ஒரு காரின் படத்தை ஷெல் படம் போட்ட கவரில் மூடியவாறு இருப்பதைக் காட்டிவிட்டு, 'இதுதான் என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட். எனக்கும், ஷெல் நிறுவனத்துக்கும் இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கப்போகிறது’ என்று சொன்னார். அதைப் பற்றி உங்கள் கருத்து?''

''கார்டான் முரே, எங்களை அவருடைய அடுத்த திட்டத்துக்கு இணைத்துக் கொண்டது பெரிய வரம்தான். அவர் சொன்னது போல, ஷெல் நிறுவனம் முற்றிலும் புதிய துறையில் காலடி எடுத்துவைக்க இருக்கிறது. எண்ணெய், லூப்ரிகன்ட்ஸ் இல்லாமல், புதிய விஷயத்தை ஷெல் நிறுவனம் இந்தத் திட்டத்தின் மூலம் செய்ய இருக்கிறது. விரைவில் முழு தகவல்களை வெளியிடுவோம்.''

ர. ராஜா ராமமூர்த்தி

மோட்டார் விகடன் - ஏப்ரல் 2014 இதழில் இருந்து - From Motor Vikatan - April Issue

TAGS :   shell, iit madras, iit chennai, gordon murray, petroleum, future