பொதுவாக வேஸ்ட்டான டயர்களை வெச்சு நாம என்ன பண்ணுவாங்க? சின்ன வயசுல டயர் வண்டி ஓட்டுவாங்க. ஊஞ்சல் கட்டி விளையாடுவாங்க. போகி அன்னிக்கு எரிப்பாங்க. இதுவே நிறுவனங்கள் என்ன செய்யும்? பழைய டயர்களை ஓரளவு சரிசெய்து அதனை சிறிய நகரங்களில் விற்பனை செய்யப்படும் அல்லது இன்ஜினியரிங் ரெக்கவரிக்கு பயன்படும் அல்லது செங்கல் சூளையில் எரிக்க கொடுத்துவிடுவார்கள்.

ஆனால் இவ்வாறு மறுபயன்பாடு செய்யப்படுவது சுற்றுச்சூழலுக்கு தீங்கானது. டயர்களை எரிப்பதால் கார்பன் அதிக அளவில் வெளிப்படும். இது காற்றை மாசுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், உடல்நலத்தையும் பாதிக்கும். சுற்றுச்சூழலையும் நம்மையும் பாதிக்காம அதைவைத்து புதுசா எதாச்சும் பண்ணா? ஒரு பூங்கா உருவாக்கினா? டயர்களை பூந்தொட்டியா பயன்படுத்தினா? எப்படி இருக்கும்?! கேட்க வேண்டாம்! மாத்திட்டாங்க......!

அப்போலோ டயர்ஸ் நிறுவனம், பழுதடைந்த டயர்களை கொண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பழுதடைந்த டயர்களை கொண்டு “Go The Distance” என்ற சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவை இந்த பூங்கா 100 முதல் 180 டயர்கள் கொண்டு 1 லட்சம் ரூபாய் செலவில் அமைத்துள்ளது. கார்கள், லாரி, பஸ், லைட் ட்ரக், சைக்கிள், ஆஃப்ரோடு  டயர்களைத் தயாரிக்கும் அப்போலோ நிறுவனம், இந்த பூங்காவை அமைக்க லைட் ட்ரக் டயர்களை பயன்படுத்தி உள்ளது. பூந்தொட்டிகள், பூங்கா பெஞ்சுகள், சிறுவர்களுக்கான ஊஞ்சல், மங்கி கிளம்ப் போன்ற அனைத்தும் இவ்வகை டயர்களை கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

டயர்களால் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை திறந்து வைத்த அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சதீஷ் சர்மா பேசுகையில், “அப்போலோ நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, மிக விரைவில் இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டும் 1௦௦ மில்லியன் பயன்படுத்தாத பழுதடைந்த குப்பைகள் சேரும். இந்த டயர்களை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ இங்கு வழிகள் இல்லை. இது போன்று டயர்களை பயன்படுத்தி மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், இந்த பிரச்னை குறைய வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் இதனை கிராமப்புறங்களில் அமைப்பதால் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டு மேம்படவும், அவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய புரிதலும் ஏற்பட வாய்ப்புள்ளது.” என்றார்.

வல்லக்கோட்டை கிராமத்திற்கு அருகில் உள்ள செனக்குப்பம் கிராமப் பள்ளியிலும் இதனை போன்ற பூங்கா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுரை மற்றும் படங்கள்: அ.பார்த்திபன், மாணவப்பத்திரிகையாளர்.